Nurse

அதிகால 3.30 இருக்கும், பேச்சு மூச்சு இல்லாம இருக்கா, கண்ணு எல்லாம் மேல போச்சு, என்னால முடியல, பயமா இருக்கு, சீக்கிரமா கிளம்பி வான்னு அழுதுட்டே போன்ல சொன்னாங்க அம்மா. நான் பிரபாகரன், இருப்பது திருச்சில. மதுரையில ஒரு தனியார் மருத்துவமனையில மஞ்சகாமாலைன்னு அட்மிட்டாகி இருந்தா காவேரி. இரு சுதாவையும் மாமாவையும் வர சொல்றேன் சீக்கிரமா ன்னு சொல்லிட்டு சுதாவுக்கு போன் பண்ணேன். காவேரி சீரியஸா இருக்கா, அம்மா பயப்படுறாங்க, சீீீீீீீீீக்கிரமா கிளம்பி ஹாஸ்பிட்டல் போன்னு சொன்னதும், அய்யய்யோ அக்கான்னு சுதா கத்துனா. நான் இன்னைக்கு அக்காவை பாக்குறப்பவே நெனச்சேன், ஆள் ஒரு மாதிரி இருக்கா, பாக்கவே என்னமோ போல இருந்தான்னு ஒரே அழுகை. மாமாவ கூட்டிட்டு சீக்கிரமா போறேன்னு போயிட்டா சுதா. அதுக்குள்ள காவேரிக்கு ஆக்சிஜன் கொடுத்து ட்ரிப்ஸ் போட்டு கண்ணு முழிக்க வச்சிட்டாங்க. எதுக்கு சுதா இந்நேரத்துல விஜய்ய கூட்டிட்டு வந்துர்கன்னு கேட்டா காவேரி. என்னாச்சு பெரியம்மா, அண்ணன் சீரியஸா இருக்குன்னு போன்ல சொன்னாங்கன்னு சுதா கேட்டா. அவளுக்கு ட்ரிப்ஸ் போட்டாங்க பேச ஆரம்பிச்சிட்டா,எனக்கே இங்க என்ன நடக்குதுன்னு புரியலடி பாப்பான்னு அம்மா சொன்னாங்க. விஜி என் செல்லம்னு தங்கச்சி மவன ஆசையா கொஞ்சினா காவேரி. விஜய்னா காவேரிக்கு உசுரு. தன்னோட பையனா நினைச்சு வாழுறா. காவேரி, சுதாவோட அம்மா அப்பா ஒரு விபத்துல இறந்து போக, கல்யாணமே வேணாம், தங்கச்சியை நல்லா பாத்துக்கணும்னு, கட்டிக் கொடுத்த மதுரை ஊருக்கே நர்ஸ் வேலையில சேர்ந்தா காவேரி.

ஒரு வருஷத்திலேயே விஜய் பொறந்தான். சுதாவும் விஜய்யும் தான் காவேரியோட உலகம். வாங்குற பத்தாயிரத்து சொச்சத்துல, சுதாவுக்கு நகை சீட்டு கட்டிட்டு, போஸ்ட் ஆபீஸ்ல ஆர்டி போட்டுட்டு அவளோட காலத்தை ஓட்டிட்டு இருந்தா. அம்மா அப்பா இல்லாததால, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி எல்லோரையும் ஆசையா அப்பா அம்மான்னு கூப்பிடுவா. எல்லா உறவையும் தன்னோட சொந்தமா நினைச்சு பாக்குறவ. ஊர்ல இருக்கிற சொந்தக்காரங்களுக்கு என்ன உடம்புக்கு ஆனாலும் காவேரி மதுரையில நர்ஸ் வேலை பாக்குறான்னு அவளுக்கு போன் போகும். ஆப்ரேஷன் தியேட்டர் நர்ஸ்னு கெத்தா இருப்பா. ஹாஸ்பிடல்ல டாக்டர்களுக்கு காவேரின்னா அவ்வளவு பிரியம். ஆப்ரேஷன் தியேட்டருக்கு என்னென்ன டூல்ஸ் தேவைப்படுதோ, அத்தனையும் சரி செஞ்சு கிளீன் பண்ணி டெய்லியும் எடுத்து வைக்கிறது காவேரியோட வேலை. ஆபரேஷன் செய்ற டாக்டருங்க என்ன டூல் கேட்பாங்கன்னு தெரிஞ்சு அடுத்த நொடியே அவங்க கேட்குறதுக்கு முன்னாடியே எடுத்து கொடுத்துடுவா, அவ்வளவு கருத்தா இருப்பா. இதனாலேயே ரெண்டு தடவை சிறந்த நர்ஸ்னு அவார்டு வாங்கி இருக்கா. நோயாளியா வர்றவங்களும் நல்லபடியா திரும்பி போறப்ப காவேரிக்கு டிரஸ் வாங்கி தர்றது, ஸ்வீட்ஸ் கொடுக்கிறதுன்னு மனசார வாழ்த்திட்டும் போவாங்க.டே ஷிப்ட் நைட் ஷிப்ட்னு மாறி மாறி ரவ பகலா உழைச்சா. இதுனாலயே என்னவோ பத்து வருஷமா தனக்கு புடிச்ச நர்ஸ் வேலையை விட்டுட்டு உடம்பு சரியில்லாம திருச்சில இருக்கிற பெரியம்மா வீட்டுக்கு வந்தா. 

லதா, என் மனைவி. பிரத்தில கட்டி இருந்தாலும், ஜூஸ் நட்ஸ்னு கொடுத்து நர்மதாவ நல்லா பாத்துக்கிட்டா. குட்டி அண்ணின்னு காவேரி பாசமா அழைப்பா. உடம்பு நல்லாவே சரியாச்சு. பத்து வருஷமா வேலை பார்த்துட்டு, மூணு மாசம் வீட்ல சும்மா இருக்க முடியல. உடம்பு கஷ்டத்தை விட அவளுக்கு ஒவ்வொரு நாளையும் எப்படி ஓட்டுறதுன்னு தெரியல. ஹாஸ்பிடல்ல துரு துருனு இருந்தவளால இப்படி டிவியை பார்த்துட்டும் போன் நோண்டிட்டும் இருக்க முடியல. நான் மதுரைக்கு போல, சொந்த ஊரான புளியம்பட்டில இருக்கிற கிளினிக்கில நர்சா வேலை பாத்துக்குறேன், உடம்பு தான் சரியாச்சுல, என்னால வேலை பாக்காம இருக்க முடியல, பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்குன்னு சொன்னா.சரின்னு புளியம்பட்டிக்கு அனுப்பி வச்சோம். புளியம்பட்டி எங்களோட சொந்த ஊரு. திருச்சிக்கும் மதுரைக்கும் நடுவுல இருக்குற ஊரு. மதுர பைபாஸிலேயே காவேரிக்கு வீடு. காவேரியோட தாத்தா கூட பொறந்தவங்க மூணு பேரு. எல்லாருக்கும் அடுத்தடுத்து வரிசையா வீடு. பத்துக்கு பத்துல ஒரு சிறிய ரூமு, பத்துக்கு இருபதுல ஒரு பெரிய ஓட்டு அடுப்படி. விவசாயம் பார்த்து கிடைக்கிற பருத்தி, பயிறு வகைகள் எல்லாம் அடுப்படியில தான் சேர்த்து வைப்பாங்களாம். தாத்தா கூட பொறந்த இரண்டு பேரும் திருச்சில சொந்தமா வீடு கட்டிட்டாங்க. அதனால அவுங்க ரெண்டு வீடும் மூணு வீட்டு ஓட்டு அடுப்படிகளும் பாழடைஞ்சு கிடந்துச்சு. பையன இழந்த சோகத்திலேயே காவேரியோட தாத்தா பாட்டியும் சீக்கிரமா இறந்துட்டாங்க. சொந்தமா தனக்குன்னு இருக்கிற அந்த ஒரு வீட்டை அப்படி பாத்துக்கிட்டா காவேரி. 40 வருஷத்துக்கு முன்னாடி பில்லர் போடாம கட்டுன வீடுனால, செவுறு எல்லாம் விரிசல் விட்டு இருக்கும், இறந்து போன அப்பா அம்மா தாத்தா பாட்டி படங்கள் மாட்டி இருக்கும், ஒரு கால் இல்லாத துரு புடிச்ச இரும்பு பீரோ, பழைய ட்ரங்க் பெட்டி, அலமாரியில சின்னதா சாமி படங்கள், தரையில கொஞ்சம் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கிற பாத்திரங்கள், ஒரு டேபிள்ல கேஸ் அடுப்பு, அந்த காலத்து ஸ்விட்ச், கீச் கீச்சுன்னு சத்தம் வர மின்விசிறி, கவர்மெண்ட் கொடுத்த டிவி, மிக்ஸி, கிரைண்டர் இவைதான் காவேரியோட உயிரற்ற சொந்தங்கள். 

போன ஒரு மாசத்திலேயே காய்ச்சல் வந்து சரியா தன்னை கவனிச்சுக்காம மஞ்சள் காமாலை வரைக்கும் போயிடுச்சு. அம்மா ஊருக்கு போயிட்டு காவேரியை பார்த்துக்கிட்டாங்க. உடம்பு தேறாததனால வேலை பார்த்த ஹாஸ்பிடல்ல சேர்த்தாச்சு. மஞ்சகாமாலை கடைசி கட்டத்துல இருக்கா, எப்படியாவது முயற்சி பண்றோம், கஷ்டம் தான் மா அப்படின்னு டாக்டர் சொன்னதா அம்மா சொன்னாங்க. அடுத்த நாள் அதிகாலை 3.30 மணிக்கு தான் பேச்சு மூச்சு இல்லாம இருந்தான்னு அம்மா கிட்ட இருந்து போன் வந்துச்சு. காவேரி பேசவும், காலைல வரேன், பெரியம்மா மட்டும் தனியா இருப்பாங்கன்னு மாமாவையும் விஜய்யையும் வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டா சுதா. நைட் ஃபுல்லா தூங்காம இருக்கவும் எனக்கு அசதியா இருக்கு நான் போய் கொஞ்சம் படுத்து எந்திரிச்சு வரேன்னு அம்மா தூங்க போய்ட்டாங்க. எனக்கு என்னமோ நடக்குது, எவ்வளவு பேரை காப்பாத்திருப்பேன் அந்த புண்ணியம் கூட என்னை வந்து காப்பாத்தாதானு கண்ணு கலங்கி சுதா கிட்ட சொல்லிட்டு இருந்தா காவேரி. அக்கா சரியாயிடும் இப்ப கொஞ்ச நேரம் தூங்குனு சுதா சொல்லியும் காவேரியோட புலம்பல் நிக்கவே இல்ல. திடீர்னு கண்ணு மேல போய் அப்படியே கிடந்தா. அக்கான்னு சுதா கத்துனா, தூங்கிட்டு இருந்த அம்மா பதறி அடிச்சு ஓடி வந்தாங்க. ஜெனரல் வார்டு நாள எல்லாரும் என்ன ஆச்சுன்னு திரும்பி பார்த்தாங்க. நர்ஸ் வேகமா ஓடிவந்து கன்னத்துல தட்டுறாங்க, துடிப்பு பாத்துட்டு இருக்காங்க, எந்திரி தங்கம் கண்ணை முழிச்சு பாருன்னு அம்மா அழுதுட்டே சொல்லுறாங்க. அக்கா என்னை பாரு என்னை பாருன்னு சுதா சொல்லுறா, காவேரி கிட்ட இருந்து எந்த அசைவும் வரல.

6:30 மணிக்கு அம்மா கிட்ட இருந்து அழுகுரல் கேட்டுச்சு. காவேரி நம்மள விட்டு போயிட்டா பிரபா என்று அம்மா கதறுனாங்க. நர்ஸ்னு கத்தி அழுதேன். என்னாச்சுங்கன்னு பதறி அடிச்சு எந்திரிச்சா லதா. காவேரி இறந்துட்டான்னு சொல்லவும் அண்ணின்னு தோளுல சாஞ்சுட்டு அழுதா. வாடகை கார் புடிச்சு ரெண்டு பேரும் புளியம்பட்டிக்கு கிளம்பனோம். வெளிநாட்டில இருக்கிற அண்ணன் அண்ணிக்கு போன் பண்ணி தகவல் சொன்னப்போ, வர முடியாத சூழ்நிலைல மாட்டிக்கிட்டேனு அண்ணன் அழுதான். காரியத்துக்கு தேவையான ரூவாவ உடனே போட்டு விட்டான். கிருஷ்ணகிரியில இருக்கிற அக்காவுக்கு தகவல் சொன்னேன். அவளை நான் ஒரு தடவை பார்க்கணும் நான் வர்ற வரைக்கும் தூக்கக்கூடாதுன்னு சொல்லிட்டு மாமா கூட கிளம்பிட்டா. தாய் மாமாவுக்கு போன் பண்ணி சீர் எடுங்கன்னு சொன்னேன். சுதா கிட்ட இருந்து போன், அண்ணே காவேரிய சுடுகாட்டுக்கு நேரா தூக்கிட்டு போக சொல்றாரு ராமு பெரியப்பான்னு சொன்னாள். ஊர்ல எந்த நல்லது கெட்டதுக்குனாலும் முன்னாடி நின்னு பாக்குறவரு ராமு பெரியப்பா. ஊரிலேயே விவசாயம் பார்த்துட்டு ஒரு சில பஞ்சாயத்துகளும் பார்ப்பாரு. ராமு பெரியப்பாக்கு போன் பண்ணேன். என்னாச்சு பெரியப்பா ஏன் புளியம்பட்டி வீட்டுக்கு கூட்டிட்டு வரக்கூடாதுன்னு சொல்றீங்கன்னு கேட்டேன். வெளியில இறந்துட்டா ஊருக்குள்ள கூட்டிட்டு வரக்கூடாதுப்பா அப்படித்தான் நம்ம பண்றதுன்னு சொன்னாரு. அப்புறம் ஏன் என் அப்பா வெளியில இறந்தப்ப ஊருக்குள்ள கூட்டிட்டு வந்தீங்கன்னு கேட்டேன். அவரால பதில் சொல்ல முடியல. நீ எதுனாலும் வாசுட்டையும் நடேசன்டையும் கேட்டுக்கன்னு போன வச்சுட்டாரு. வாசுவும் நடேசனும் காவேரி தாத்தாவோட தம்பி பசங்க. என்னாச்சு பெரியப்பா ஊருக்கு கூட்டிட்டு வரக்கூடாதுன்னு ராமு பெரியப்பா சொல்றாரு வீட்டுக்கு தானே கூட்டிட்டு போகணும்னு வாசு பெரியப்பாட்ட கேட்டேன். கல்யாணம் வச்சிருக்கோம் பா இப்ப எப்படி ஊருக்கு கூட்டிட்டு வர்றதுன்னு சொன்னாரு. நடேசன் சித்தப்பாவோட மூத்த பெண்ணுக்கு 20 நாளிலும், ராமு பெரியப்பாவோட கடைசி பையனுக்கு அடுத்த முப்பது நாளிலையும் கல்யாணம் இருக்கு. அத காரணம் காட்டி ராமு பெரியப்பா சொன்னாரு. காவேரிக்கு புளியம்பட்டி வீடுன்னா ரொம்ப பிடிக்கும். அவளை அங்க கூட்டிட்டு வந்து உரிய மரியாதை செஞ்சா தான் அதோட ஆத்மா நிம்மதியா போகும்னு வாசு பெரியப்பா கிட்ட சொல்லி அரை மனசா சம்மதம் வாங்கினேன். வீடு முன்னாடி புதரு மண்டி கிடக்கவும், எப்பவும் செடி வெட்டுற மருதம்பட்டியாருக்கு போன் பண்ணி கொஞ்சம் சீக்கிரம் சரி பண்ணி விடுங்க அண்ணே காரியம் இருக்குன்னு சொன்னேன். இந்தா ஆளுங்கள கூட்டிட்டு போறேன் தம்பின்னு சொன்னாரு. ஊர்ல போய் இறங்கினேன். பங்காளி வீட்டு ஆளுங்க எல்லாரும் காவேரியை ஊருக்குள்ள கூட்டிட்டு வரக்கூடாதுன்னு சொன்னாங்க. வெளியூர்ல இறந்தவங்கள ஊருக்கு கூட்டிட்டு வந்தா நிறைய பேய்கள் வரும் அதனால விடக்கூடாதுன்னு சொன்னாங்க. அக்கம் பக்கத்துல இருக்கிறவங்களுக்கு தொந்தரவு தருமுன்னு சொன்னாங்க. இன்னுமா இதெல்லாம் நம்பிட்டு இருப்பீங்க அந்த புள்ள ஆசைப்பட்டது இது ஒன்னு தான், அதோட வீட்டுக்கு கூட கூட்டிட்டு வரக்கூடாதா? அவளோட வீட்டுல தான் வைக்கிறோம் எல்லாரும் அவங்க அவங்க வேலைய பாருங்க, எல்லாரு வீட்லயும் எல்லாருமே வெளியூர்ல தான் வேலை பார்க்கிறாங்க, யாருக்கு எப்போ என்ன ஆகும்னு தெரியாது எல்லாரையும் சுடுகாடு கூட்டிட்டு போக முடியுமா? யாருமே இல்லாத பிள்ளைனால இப்படி அனாதை மாதிரி சுடுகாடு கூட்டிட்டு போக சொல்றீங்களா? இதே அந்த வீட்டில யாராவது ஆளுங்க இருந்தா அந்த பிள்ளையை அப்படி விட்டுருப்பாங்களா? இதெல்லாம் நியாயமா இருக்கா அப்படின்னு கேட்டேன். எல்லாரும் அமைதி ஆகிட்டாங்க. ஊருக்கு தூக்கிட்டு வர்றதுன்னா சுடலை கிட்டயே நிப்பாட்டி ஆம்புலன்ஸ்க்கு முன்னாடி சில காரியங்கள் பண்ணனும், தேவையானதெல்லாம் வாங்கிட்டு வான்னு வைக்கோல், கடுகு, வர மிளகாய், தீப்பெட்டி வாங்கிட்டு வர சொன்னாங்க. ஆம்புலன்ஸ் வந்துச்சு, சுடலை கிட்டயே நிப்பாட்டி, வைக்கப் போற எரிச்சு அதை தாண்டி ஆம்புலன்ஸ் வந்துச்சு. காவேரியை வெளியில எடுத்தோம், முகமெல்லாம் மஞ்சளா இருந்துச்சு. ஐஸ் பாக்ஸ் குள்ள வச்சோம். பொம்பளை ஆளுங்க எல்லாம் கூடி நின்னு அழுக ஆரம்பிச்சாங்க. பாட்டிங்களெல்லாம் ஒப்பாரி பாட ஆரம்பிச்சாங்க. 30 வயசுல வரக்கூடிய சாவான்னு எல்லாரும் நொந்துக்கிட்டாங்க. ராமு பெரியப்பா என்னைய கூப்பிட்டாரு, முறை செய்ய ஆள் இல்ல, பொதுகொள்ளி தானே வைக்கணும்னு கேட்டாரு. எனக்கு கோவம் சுருக்குனு வந்துச்சு, அவளுக்கு தாய் மாமா இருக்காங்க சீர் எடுப்பாங்க, தங்கச்சி மவன, தன் சொந்த பையனா நினைச்சா, அவன் தான் கொல்லி வைப்பானு சொன்னேன். சுதா ஊர்ல சாத்திரை திருவிழா இருந்துச்சு, அதுவும் இல்லாம மாமன் மச்சின வீடு எப்படி கொள்ளி வைக்க முடியும், அது முறையாகாது அப்படின்னு சொன்னாங்க. உடனே வாசு பெரியப்பா, சின்ன பையன் சொல்றதெல்லாம் எதுக்கு எல்லாம் கேட்டுட்டு இருக்கீங்க, பெரிய ஆளுங்க சொல்றத பாருங்கப்பா என என்னை ஜாடை மாடையா சொன்னாரு. கல்யாணமாகாம இறந்த பொண்ணு, அதனால எந்த சடங்கும் செய்யக்கூடாது அப்படியே தூக்கிட்டு போய் எரிக்கணும்னு சொன்னாங்க. 

காவேரியோட அப்பாவோ தாத்தாவோ இப்படி சொல்லி இருந்தா மறுப்பு ஏதும் சொல்லாமல் சரின்னு சொல்லி இருப்பேன். யாருமே இல்லாத பொண்ணு, எல்லாரையும் உறவா நெனச்ச பொண்ணு, யாரோ முகம் தெரியாதவங்கள காப்பாற்றி இருக்கிற பொண்ணுக்கு கடைசியா ஒரு மரியாதை கூட செய்யாம அப்படியே தூக்கி போடுறதுக்கு எனக்கு மனசு வரல. தூக்கி போடறதுன்னா நீங்களே போட்டுக்கோங்க நான்லாம் எதுவும் வரமாட்டேன் அப்படின்னு சொல்லிட்டேன். உடனே நடேசன் சித்தப்பா ஓட மனைவி சுந்தரி, ஏன் இப்படி சொல்லுற இந்த பிள்ளைக்கு சடங்குலாம் பண்ணுனா கருமாதி வரைக்கும் விளக்கு ஏத்தனும், யாரு இருந்து விளக்கேத்துறதுன்னு கேட்டாங்க. நான் இருந்து பார்க்கிறேன்னு சொன்னேன். அப்பதான் எனக்கு ஒன்னு புரிஞ்சுச்சு. காவேரிக்கு நல்லபடியா அடக்கம் பண்ணா கருமாதி வரைக்கும் பார்த்துக்கிறதுக்கு ஆள் தேவை படும்னு எல்லாரும் இங்க ஒதுங்கிட்டாங்க. நடேசன் சித்தப்பாக்கும் வாசு பெரியப்பாக்கும் கல்யாண வேலைகள் இருக்கு. வாசு பெரியப்பா ஹோட்டல் வச்சிருக்கார், அவர் எப்பவுமே லீவு விட யோசிக்கிறவரு, எங்க எல்லா காரியமும் செஞ்சுட்டா தான் இங்க இருக்கணுமேனு நினைச்சுட்டாங்க. நியாயமா கொள்ளி வைக்கணும்னா வாசு பெரியப்பா தான் வைக்கணும். காவேரியோட தாத்தா பாட்டிக்கு அவர்தான் கொள்ளி வச்சாரு, அவங்க சொத்து எல்லாத்தையும் வாசு பெரியப்பாவுக்கு தான் வித்தாங்க. தனக்கு அப்புறம் பேத்திகளுக்கு அவரு பாத்துப்பாருன்னு நினைச்சாங்க. ஆனா வாசு பெரியப்பா குணம் அப்படி கிடையாது, காசு குறியா இருப்பாரு, மனுஷங்கள கண்டுக்கவே மாட்டாரு. யாரு கொள்ளி வைக்கிறதுன்னு பேச்சு மறுபடியும் அடிபட்டுச்சு. காவேரியோட தாத்தாவுக்கும் என்னோட தாத்தாவுக்கும் ஒரே அப்பா, அம்மா வேற வேற. மூணு வீட்டுக்காரங்களும் எப்பவுமே ஒரு தாய் மக்கள்னு ஒண்ணா இருப்பாங்க, நாங்க தனியா இருப்போம். இதனால காவேரிக்கு கொள்ளி வைக்கிற உரிமை எங்களை விட அந்த மூணு வீட்டுக்காரங்களுக்கு யாராவது ஒரு ஆள் தான் எடுத்திருந்திருக்கணும். செஞ்சிட்டா எட்டு நாள் ஊரிலேயே இருக்கணும், பிழைப்ப விட்டுட்டு அது மாதிரி இருக்க யாருக்கும் இஷ்டம் இல்ல, அவங்களோட எண்ணம் அப்படியே சுடுகாட்டுக்கு கூட்டிட்டு போய் பொதுகொள்ளி வைக்கணும்னு, அப்படி வச்சுட்டா, எல்லாம் அவங்க அவங்க பொழப்பா அடுத்த நாள் பாக்க ஆரம்பிச்சிடலாம், ஆனா அது நடக்காம போயிடுச்சு. சரின்னு ஊருக்கு கூட்டிட்டு வந்தாங்க, ஊர்ல நான் ஒரு சில காரியங்கள் எல்லாம் செஞ்சுட்டுதான் பண்ணனும் அப்படின்னு சொல்லவும் அதுல யாருக்குமே விருப்பமில்லை. அதனால கொள்ளி வைக்கிறதுக்கு நான் சம்மதம் சொன்னேன். யார் சொல்றதையும் கேட்காம நான் செய்யவும், எப்பவுமே முன்னாடி நின்னு பாக்குற ராமு & வாசு பெரியப்பா தனக்கு சம்பந்தமில்லாத மாதிரி ஒரு ஓரமா போயிட்டு உட்கார்ந்தாங்க. வேற யாருக்காக இருந்தாலும் அவங்க தான் முன்னாடி நின்னு பார்த்து இருந்துர்பாங்க. ஆனா ஆள் இல்லாத வீடுங்கறதுனால அவங்களுக்கு வர விருப்பம் இல்ல. என் அக்கா அழுதுட்டு நடந்து வந்தா, அதுவரைக்கும் சிரிச்சு பேசிட்டு இருந்த நடேசன் சித்தப்பா அக்காவை பார்த்ததும் சோகமா மூஞ்சிய வச்சுக்கிட்டு நடிச்சாரு. அவரு மட்டும் இல்ல, வந்திருந்த எல்லா பெரிய ஆளுங்களும் சிரிச்சு பேசிட்டு இருந்தாங்க, எப்பவுமே வயசான ஆளு இறந்தா தான் இப்படி சிரிச்சு பேசிட்டு இருப்பாங்க. ஆனா, 30 வயசு பொண்ணு இறந்து இருக்கு எந்த கவலையும் இல்லாம சிரிச்சு பேசிட்டு கதை அடிச்சுக்கிட்டு இருந்தாங்க பாக்கவே ரொம்ப கோபமாகவும் கவலையாகவும் இருந்துச்சு. இதுவே அவங்க வீட்ல இது மாதிரி நடந்து இருந்தா இப்படி இருந்திருப்பாங்களான்னு தெரியாது. மோச்சோலை எடுத்தோம். தாய் மாமா சீராக மளிகை சாமான் காய்கறி சேலை எடுத்துட்டு வந்தாரு. அப்புறம் கோடி துணியை எடுத்துட்டு வந்தவங்க போட்டாங்க. நீர் மாலை எடுத்துட்டு வந்தோம். மழை அடிச்சு பேஞ்சுச்சு ஒரு மணி நேரமா. 

லேசா தூறல் போடவும், ஒருவழியா சுடுகாட்டுக்கு கூட்டிட்டு போனோம். நான் கொள்ளி வைக்கிறதுனால மொட்டை அடிக்க சொன்னாங்க. ஆனா, கையில மட்டும் முடியை எடுத்துட்டு வந்தேன். நிறைய ஆட்களை பாக்க வேண்டிய சூழ்நிலை, அதனால என் தொழிலுக்கு மொட்டை அடிக்கிறது சரிவராதுன்னு கையில மட்டும் சம்பிரதாயத்துக்கு முடிய எடுத்துட்டேன். செஞ்சா எல்லாத்தையும் ஒழுங்கா செய்யணும் அப்படின்னு வாசு பெரியப்பா சொன்னாரு. கொள்ளி வைக்கப் போறப்ப கொள்ளிக்கட்டைய வாசு பெரியப்பா கையில வச்சிருந்தாரு, அவர்கிட்ட கேட்டேன். வாங்கவும் முயற்சி பண்ணுனேன். அவர் கொடுக்கவே இல்ல. அவரு கைய புடிச்சிட்டு வைக்க சொன்னாரு. அவரு கைய புடிச்சு வச்சேன் எல்லாரும் என்கிட்ட கொள்ளிக்கட்டையை கொடுக்க சொன்னாங்க. ஆனா அவரு ஃபர்ஸ்ட் வச்சிட்டாரு நான் வைக்காம. கடைசில பொது கொள்ளி மாதிரி தான் வச்சோம். வாசு பெரியப்பாவோட ஈகோ தான் ஜெயிச்சுச்சு. எது எப்படியோ ஊருக்கு தூக்கிட்டு வரக்கூடாதுன்னு சொல்லி, அப்படி வந்ததும் காரியமே செய்ய கூடாதுன்னு சொல்லியும் காவேரிய சந்தோசமா வழி அனுப்பி வச்ச திருப்தி எனக்கு போதும். ஆனா ஒன்னு மட்டும் நல்லா தெரிஞ்சுச்சு, ஒரு வீட்ல ஆம்பள இல்ல அப்படின்னா சாவு கூட நிம்மதியா இருக்காது. பெரியவங்க ஏன் வாரிசு வேணும்னு சொல்றாங்கன்னு இப்போதான் புரிஞ்சுச்சு. நல்லது கெட்டது செய்யறதுக்கு ஒரு ஆம்பள இருந்தா யாரையும் எதிர்பார்க்க வேண்டாம். காவேரி மாதிரி ஆம்பள இல்லாத வீட்டில் இருக்கிற பெண்களுக்கு சாவு கூட போராட்டமே!

Comments